காட்சி மலை

தெற்கு கள்ளிகுளத்தின் தெற்கே, எம் மக்களின் எண்ணத்தைப் போன்று பரந்தும், விரிந்தும், எம் மக்களின் மனதைப் போல உயர்ந்தும், நிமிர்ந்தும் நிற்கிறது. அன்னையின் பாதம் பதிந்த மலை மன அமைதிக்கென்றே அன்னை மரியாளால் புனிதப்படுத்தப்பட்ட புனித மலை. இவ்வூரின் சிறப்புக்கு சாட்சியாய் நிற்பது இக்காட்சி மலை என்றால் அது மிகையில்லை.

கி.பி.1939, மார்ச் 23ம் தேதி வியாழக்கிழமை தெற்கு கள்ளிகுளத்தின் வரலாற்றின் கிழிக்க முடியாத பக்கங்களில் அழிக்க முடியாமல் இடம் பெற்ற நன் நாள் மாலை மயங்கும் நேரம். கதிரவன் தன் கடமையை முடித்து விடைபெறும் வேளை மலையடி வாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் 6 சிறுவர்கள். பாவம் செய்யும் சிந்தை அற்றவர்கள். அன்னை மரியாளைப் பற்றியும் சிந்தனை அற்றவர்களாய் விளையாட்டில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த நேரம். பகலும் இரவும் உரசிக் கொண்ட உன்னத தருணத்தில் மலை மீது வெண்ணிற கீற்று போல இறங்கியது. மின்னல், மின்னலைக் காண திறந்தது சிறுவர்களின் விழிசன்னல். அங்கே அன்னையின் அற்புத தரிசனம். வெண்ணிற ஆடை அணிந்து கையில் குழந்தையுடன் கூப்பிய கரங்களில் செபமாலையுடன், வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற வெண்ணிற நீரோடை அன்னையின் பாதத்தில் இருந்து பாய்ந்தோடிக் கொண்டிருக்க புன்னகை சிந்தியவளாய் ஊரை ஆசீர்வதித்தாள் அன்னை. மீண்டும் ஒளி வெள்ளம் தோன்ற அன்னை மறைந்து விட்டாள்.

அன்னையின் பாதத்தில் இருந்து வெள்ளம் பாய்ந்தோடியது. காட்சியை கண்ட சிறுவர் கூட்டம் ஊரை நோக்கி பயந்தோடியது. சிறுவர்கள் அனைவரையும் ஆட்கொண்டது அச்சம். அன்னையின் காட்சி நினைவு மட்டும் இருந்தது மிச்சம். பயத்துடன் ஊருக்குள் வந்த சிறுவர் கூட்டம் அன்னையை பார்த்தோம் என்று முறையிட்டது மனித பலவீனமான அவநம்பிக்கை குறுக்கிட்டது. அன்னையின் புகழ் பரவ அது திரையிட்டது. மனித அவநம்பிக்கையை கண்ட சிறுவர்கள் முட்டை மீது கட்டை விழுந்தது போன்று நொறுங்கினார்கள்.

பூக்களின் புகழை பூக்கள் பரப்பாது
காற்றுதான் அதன் புகழை பரப்பும்

அதுபோல அன்னையின் காட்சி அலை ஊர் முழுவதையும் தனது சக்தியால் மூழ்கடித்திருந்தது. அப்போது பங்குத் தந்தையாக இருந்த அருட்திரு மரியானுஸ் அடிகளார் அவர்கள், புனித அலோசியஸ் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்த திரு.லெட்சுமண ஐயர் அவர்களிடம் காட்சி பற்றி பேசிக்கொண்டிருந்தார். உடனே லெட்சுமண ஐயர் அவர்கள் சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து இது உண்மையா அல்லது நீங்கள் இட்டுக்கட்டி கூறுகிறீர்களா என மிரட்டலான தொனியுடன் விசாரித்தார். பின்னர் பங்குத்தந்தையும், தலைமையாசிரியரும் மாணவர்களை மக்கள் முன்னிலையில் விசாரித்தனர். மாணவர்கள் அனைவரும் தாங்கள் கண்ட காட்சிக்கு சாட்சியாக, அழிக்க முடியாத கல்வெட்டாக, தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தனர். எனவே அனைவரும் அன்னை காட்சி கொடுத்த இடத்தை காணச் சென்றனர். அங்கே கடினமான பாறையில் மென்மையான அன்னையின் மேன்மையான பாதப் பதிவு அனைவரையும் பரவசமூட்டியது. அன்னை பல இடங்களில் காட்சி தந்தாலும் அகில உலகத்தை பொருத்தவரை தெற்கு கள்ளிகுளத்தில் மட்டும் தான் தனது பாதப்பதிவை விட்டுச் சென்றுள்ளாள் என்றால் அது மிகையில்லை.

சின்ன சந்தேகக் கோடு, சீனத்து பெருஞ்சுவராய் வளர்ந்தது போல அவர்களின் சந்தேகம் வலுத்தது. எப்படியென்றால் ஒரு இரவுக்குள் சிற்பி யாரேனும் வந்து செதுக்கியிருப்பானோ? என்று சந்தேகப்பட்டனர். இடியோடு வரும் மழைபோல, முட்செடியில் மலரும் ரோஜா போல சந்தேகத்துக்கு இடையேயும் சந்தோஷமாக ஒலிக்கத் தொடங்கியது மக்கள் குரல். ‘இது அன்னையின் பாதப் பதிவு தான்” என்று அநேகர் கூறத் தொடங்கினர். சின்ன தூறலில் தோன்றிய மழை ஆற்றல் மிகுந்த அடை மழையாக மாறியது போல மக்களின் குரலை ஓங்கச் செய்தது. ஆடு மேய்க்கும் இடையர்களின் குரல் அவர்கள் தாங்களும் நேற்று மாலை ஒரு வித்தியாசமான ஒளியை பார்த்தோம் என்று கூறினர். இறுதியாக அனைவரும் காட்சி பற்றிய இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை பங்கு தந்தையிடம் ஒப்படைத்தனர். பங்கு தந்தை காட்சி நடந்த இடத்தில் முழங்கால் படியிட்டு ஜெபித்தார். பின்னர் மக்களைப் பார்த்து காட்சி உண்மையென்றால் இன்று மழை பொழியட்டும் என்று கூறி முடித்தார். மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

சாட்சிக்கு வேண்டுமென்றால் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். ஆனால் காட்சிக்கு நம்மால் முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதை அன்று கொட்டிய மழை நிரூபித்தது. அது மழைக்காலமும் அல்ல. 13 ஆண்டுகளாக மழை சரியாக பொழியாத வறண்ட காலம். அப்போது பெய்த மழை கள்ளிகுளத்தின் மண்ணை மட்டும் நனைக்கவில்லை மக்கள் மனத்தையும் நனைத்தது. மக்கள் உள்ளத்திலும், ஊரிலும் தவழ்ந்த குளிர்ச்சி, மார்கழி மாத குளிர்ச்சியாய் அன்னையின் புகழை உலகெங்கும் பரப்பியது. இன்றும் காட்சிக்கு சாட்சியாய் விளங்குகிறது அன்னையின் பாதம் பதிந்த புனித மலை.

இன்று இப்புண்ணிய பூமியில் உள்ள காட்சிமலையின் அடியில் கிறிஸ்து ராஜா கெபி, காட்சி மலையில் பாதம் பதிந்த இடத்தில் கெபி, வியாகுல அன்னை கெபி, கல்வாரி குன்று, பாத்திமா அன்னை சிற்றாலயம் மற்றும் புனித அந்தோணியார் சிற்றாலயம் ஆகியவை உள்ளன. மலையின் பின்புறம் இளநீரின் சுவை கொண்ட நீரை வழங்கும் சுனை அருகே சுனை மாதா கெபியும் உள்ளது.

கலைநயத்துடனும் ஆன்மீக அருள் வழங்கும் ஊற்றாகவும் இத்திருத்தலம் விளங்குகின்றது. எங்கும் அன்னை மயம், எதிலும் அன்னை மயம். நீங்களும் வாருங்கள் அவ்வான்மீக பூமிக்கு அன்னையின் அருள் குளம் போல் தேங்கியுள்ளது. இக்குளத்தின் நீரினை வந்து பருகுங்கள். வளமான எதிர்கால வாழ்வை பரிசாக வெல்லுங்கள்.

அன்னையின் அற்புதங்களில் சில:

  • முன்பு ஒரு முறை அன்னையின் ஆலயம் சார்ந்த வழக்கு ஒன்று வழக்காடு மன்றத்தில் நடந்து கொண்டிருந்த வேளை. வழக்கிற்கு சாட்சி சொல்ல அப்போதைய தர்மகர்த்தாவின் தலைமையில் ஆலய நிர்வாகிகள் சென்று கொண்டிருந்தனர். சரியான பேருந்து வசதியில்லாத காலகட்டம் அது என்பதால் அவர்களால் சரியான நேரத்திற்கு சாட்சி சொல்ல வழக்காடு மன்றத்திற்கு செல்ல இயலவில்லை. ஆனால் அதே நேரத்தில் வழக்கிற்குரிய சாட்சி அங்கே சொல்லப்பட்டு அன்னையின் ஆலய நிர்வாகத்தினருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அங்கு சாட்சி சொல்லி நிர்வாகத்தினருக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுத் தந்தவள் நம் பனிமய அன்னை தான்.
  • சிங்கம் பாறையை சேர்ந்த குஷ்ட நோயாளி ஒருவர் அன்னையின் பாதம் பதிந்த இடத்தை தன் கரத்தால் தொட்டு தடவியதும் அவர் முழுமையாக குணமடைந்தார். அந்நாள் முதல் இந்நாள் வரை அவ்வூர் மக்கள் ஏராளமானோர் கிட்டத்தட்ட அனைவருமே வருடம் தவறாமல் அன்னையின் அருளை பெற்று செல்ல இத்திருவிழா நாட்களில் வருகின்றனர்.
  • கேரளாவில் உள்ள விளிஞ்சம் என்ற ஊரில் உள்ள பெண்மணி அன்னையின் ஆலய திருவிழாவிற்கு வருகையில் தனக்கு பக்கத்து வீட்டு பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை வாங்கி அணிந்து வந்தாள். திருவிழாவிற்கு வந்தவள் காட்சி மலைக்கு சென்று புனித புல் என்று அழைக்கப்படும் சுக்குநாரிப்புல்லை அனைவருடனும் சேர்ந்து பறித்துக்கொண்டிருந்தாள். புல்லை பறிக்கும் அவசரத்தில் தன் தங்க சங்கிலியை பறிகொடுத்தாள். மிகுந்த கவலையுடன் பனிமய அன்னையை திட்டியவளாய் சொந்த ஊர் சென்றாள். இரவல் சங்கிலிக்கு உரிய பணத்தை உரியவளிடம் கொடுத்தாள். ஆண்டு 1 உருண்டோடியது. அடுத்த ஆண்டு திருவிழாவின் போது ஏற்கெனவே தங்க சங்கிலி கொடுத்தவள் நீ ஒரு அன்னையின் ஆலயத்திற்கு வருடந்தோறும் செல்வாயே இந்த ஆண்டு செல்லவில்லையா எனக் கேட்டாள். அவள் மீண்டும் பனிமய அன்னையை திட்டத் தொடங்கினாள். அன்று பனிமய அன்னை அவள் கனவில் தோன்றி திருவிழாவிற்கு அழைத்தார். பனிமய அன்னை அழைப்பை ஏற்று வந்தவளுக்;கு புதுமை காத்திருந்தது. சென்ற ஆண்டு புல் பறித்த இடத்தில் அனைவரும் பறித்த பின்னர் குறைந்த அளவே புல் இருந்தது. இவள் அங்கே சென்று பார்க்கையில் தவறவிட்ட தங்க சங்கிலி அன்னையின் அருளால் புற்பூண்டுகளின் நடுவில் இருந்து கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியால் அன்னையை புகழ்ந்து நன்றி செலுத்தினாள்.
  • இதே ஊர் மக்கள் மீன்பாடு இல்லாமல் வருந்திய காலங்களில் அன்னையின் அருளால் ஏராளமான மீனைப் பெற்று வாழ்வின் வசதி வாய்ப்பினை பெற்றுள்ளார்கள். அவ்வூர் மக்கள் அனைவரும் இத்திருவிழா காலங்களில் இங்கு வருவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு ஆகும்.
  • அன்னையின் காட்சியை தொடர்ந்து நாள்தோறும் மலையில் அரிக்கேன் விளக்கால் தீபம் ஏற்றப்படும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவ்வாறு தீபம் ஏற்றச் சென்ற போது மலை உச்சியில் இருந்து தீபத்துடன் கூடிய அரிக்கேன் விளக்கு தீபம் ஏற்றுபவரின் கை இடறி கீழே விழுந்தது. மேலிருந்து மலை அடிவாரம் வரை உருண்டு வந்த அரிக்கேன் விளக்கு உடையாமலும், ஏற்றப்பட்ட தீபம் அணையாமலும் இருந்தது.
  • குழந்தை பாக்கியம் வேண்டி வந்த ஏராளமானோர் மறு ஆண்டு மழலைகளுடன் வந்து அன்னைக்கு நன்றி தெரிவித்து சென்றுள்ளார்கள்.
  • அன்னையின் அருளால் திருமண தடை, தொழில் நஷ்டம் வாழ்க்கையில் விரக்தி, மனச்சோர்வு, பசாசின் பிடிகள், கட்டுகள் ஆகியவை நீங்கிப் புதுபொலிவுடன் மன நிறைவான வாழ்வை பெற்றோர் ஏராளம் ஏராளம்.

காவியத்தாய் மரியாள

ஏராளமான உறவுகள் நிழல் போல நம்மைத் தொடர்ந்தாலும், நிஜமாக நம்மை நேசிக்கும் நிரந்தர உறவு அம்மா மட்டும் தான். எனவே தான் ‘அம்மா” என்னும் வார்த்தை இதயத்தை நனைக்கிறது. அடிக்கடி நம் மனமும் அன்னையையே நினைக்கிறது.

இரண்டாயிரம் வருட கிறிஸ்தவ வரலாறு உலகிற்கு அளித்திருக்கும் உன்னத பங்களிப்பு நம் அன்னை ஆண்டவரால் அற்புதமாக வரையப்பட்ட ஓவியம். வாழும் போதே வரலாறு படைத்த காவியம். கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவரல்லாத சகோதர சகோதரிகளின் உள்ளங்களையும் அருளாலும், அன்பாலும் அரவணைத்து காத்து வருபவர் நம் அன்னை என்றால் அது மிகையாகாது.

நம் அன்னை ஓர் அழகான ஆன்மீக கடல். இக்கடலில் மூழ்கி விலையுயர்ந்த முத்துக்களை எடுத்திருப்போர் பலர். “ஒரு மனிதனுடைய உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் நாக்குகளாக மாறினாலும் கூட அந்த அன்னையின் தகைமைக்கு ஏற்ப அவளைப் புகழ முடியாது” என்று புனித அகுஸ்தினார் கூறியுள்ளார்.

நம் அன்னை சொற்கடந்த சுந்தரி
போற்றுதற்கரிய பூரணி
பலருக்கும் பயன்படும் ஊரணி
இத்தகைய அன்னையை நாடி வாருங்கள்
நம்பி வாழுங்கள்

மொத்தத்தில்

கவலைகளுக்கு விடை கொடுங்கள் தெற்கு கள்ளிகுளம் பனிமய அன்னையை நோக்கி படையெடுங்கள்

நன்றி