தென் தமிழ்நாட்டின் தென் மாவட்டமாம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, இராதாபுரம் தாலுகாவில் உள்ளது. அதிசயங்களையும், அற்புதங்களையும், அநுதினமும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற தெற்கு கள்ளிகுளம் வள்ளியூரில் இருந்து 10 நிமிட பயண தொலைவில் உள்ளது இப்புண்ணிய பூமி. இது ஒரு ஆன்மீக பூமி. புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுமை பூமி. அதிசயங்களையும், அற்புதங்களையும் அரங்கேற்றி வரும் அதிசய பூமி. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை நிலங்களோடு “அன்னையும் ஆன்மீகமும் சார்ந்த” ஆறாவது நிலமாக தன்னையும் இணைத்துக் கொண்ட அன்னையின் பூமி ஆம் இது பனிமாதாவின் பாசமிகு பூமி. இயற்கை அன்னையின் அருள் இங்கே இருக்கின்ற அன்னையின் அருளால் நிறைவாக உள்ளது. இப்புனித பூமியின் புகழ் புவியெல்லாம் பரவ காரணம் கத்தோலிக்க திருச்சபையின் சிறப்புமிக்க திருத்தலமாக விளங்குகின்ற பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலம் தான்.
வானுயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயம்
வைரம் போன்ற வலிமை கொண்ட ஆலயம்
வைடூரிய விழா கண்ட ஆலயம்
அருள் வரங்களை அள்ளி பொழியும் ஆலயம்
அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்திக்
– கொண்டிருக்கும் ஆலயம்
ஆம் இது நம் அன்னையின் ஆலயம்.
இத்தகைய புகழ் கொண்ட ஆலய வரலாற்றை சற்று காண்போம்.
சுழலுகின்ற காலச்சக்கரம் சற்று பின்னோக்கி சுழலுகின்றது. புள்ளியாகிப் போன நினைவுகளில் நனைந்து போக உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
ஆரம்பகாலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருண்ட பகுதியாக இருந்த இவ்வூருக்கு கி.பி.1700 முதல் சிறிது சிறிதாக மக்கள் குடியேர ஆரம்பித்தனர். முதல் கிறிஸ்தவராக தெற்கு கள்ளிகுளத்தில் குடியேறிய திரு.சூசை நாடார் என்பவர் கி.பி.1770ல் ஒரு சிறிய மாதா கோயிலை தென்னங்கீற்றுகளை கொண்டு கட்டினார். அணைக்கரை பங்குத்தந்தையாக அப்போது பணியாற்றிய அருட்திரு விக்டர் டெல்பெக்கின் வருகைக்குப் பிறகு கள்ளிகுளத்தில் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கையும் கத்தோலிக்க விசுவாசமும் அதிகமாகியிருந்தது. கி.பி.1875 நிலவரப்படி இங்கு 2000 கிறிஸ்தவர்கள் இருந்துள்ளனர். அவ்வாண்டே சிறிய கோயிலாக இருந்த இவ்வாலயத்தை வளர்ச்சியிலும், மறுமலர்ச்சியிலும் நாட்டம் கொண்ட மக்கள் தங்கள் மனதைப் போல பெரிய கோயிலாக கட்ட தீர்மானித்தனர். தங்கள் எண்ண எழுச்சியை, உள்ளத்து உணர்ச்சியை அருட்தந்தையிடம் அள்ளித் தெளித்தனர். மலைப்புற்ற தந்தை இது எங்கனம் முடியும் என்று வினவினார். வளைந்த கேள்விக்குறியை ஆச்சர்யக் குறியாக நிமிர்த்தும் ஆற்றல் பெற்ற இளைஞர்கள் ஆர்ப்பரிப்புடன் தங்களை அர்ப்பணித்தனர். விளைவு வண்டிவண்டியாய் பாறை கற்கள், மலைப்பை ஏற்படுத்தும் மணல் குவியல்கள், இவற்றைப் பார்த்த அருட்தந்தையவர்கள் சந்தேகத்தை சந்தோஷமாக மாற்றி ஆக்கமும், ஊக்கமும் வழங்கினார்.
எந்த இடத்தில் ஆலயம் கட்டுவது, அளவு என்ன போன்ற சர்ச்சைகள் ஏற்பட்டது. சர்ச்சைகளில் சிக்கி ஆலயம் கட்டுவது காலதாமதம் ஆகிவிடக்கூடாது என்று எண்ணிய அன்னை அன்றிரவே பனி பெய்யாத உஷ்ண காலத்தில் உறை பனி பெய்யச் செய்து ஆலயம் கட்ட தேவையான இடத்தையும், அளவையும் தெரிவு செய்து அவ்விடத்தை தனது ஆசீரால் நிரப்பினாள். கி.பி.355ல் எஸ்கலின் மலையில் பனியை படரவிட்டு காட்சி தந்து தேவாலயம் கட்டும்படியாக தெரிவித்த அன்னை அதற்கு அடுத்தபடியாக தெற்கு கள்ளிகுளத்தில் தான் இதே நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். கி.பி.1884 செப்டம்பர் திங்கள் 5ம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டு வேலை முழு வீச்சில் தொடங்கியது. ஊன், உறக்கம் இன்றி தங்களது உடல் உழைப்பை அன்னைக்கென அர்ப்பணித்தனர். மிகப்பெரிய அஸ்திவாரம் தோண்டப்பட்டது. மரங்களை நேசிப்பவர்கள் யாருக்கும் அதன் வேர்களை அறியும் ஆர்வம் இருப்பதில்லை. அதுபோல நாம் யாரும் இவ்வாலய அஸ்திவாரம் பற்றி அறிய முற்பட்டதில்லை. அதன் அகலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அதன்மேல் ஒரு மாட்டுவண்டி தாராளமாக செல்லலாம். இத்தகைய பெரிய ஆலயத்தை நாம் கண்டு தரிசிப்பது நமக்கு கிடைத்த வரம். அதற்கு காரணம் நம் முன்னோர் இருந்த தவம். முன்னோரின் தவத்தால் நாம் பெற்ற இவ்வாலயம் 192 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது. கோயில் முகப்பு 3 கோபுரங்களைக் கொண்டது. நடுவில் உள்ள கோபுரம் 183 அடி உயரமுடையது. இதன் இருபுறமும் அமைந்துள்ள கோபுரங்கள் 65 அடி உயரம் உள்ளது.
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் மௌண்ட்பேட்டனின் உறவினரான அப்போதைய பங்குத்தந்தை அருட்திரு கௌசானல் அடிகளாரின் முயற்சியால் இவ்வாலயத்திற்கு மாதா சுரூபம் உட்பட 3 சுரூபங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன. மேலும் தனது வசீகர ஒலியால் வானத்தையும் வளைத்து தன் கட்டுக்குள் கொண்டு வரும் அதீத சக்தி படைத்த ஆலய மணியும் பிரான்ஸ் தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது தான்.
அன்னையின் அருட்கரம் என்றும் களிகைக்கு உண்டு என்பதை அன்னை பல அற்புக நிகழ்வுகள், அதிசய காட்சிகள் மூலம் அடிக்கடி நினைவுப்படுத்தி வருகிறாள். பனி பொழிந்து பல புதுமைகளையும், அதிசயங்களையும் செய்து வருவதால் தான் இங்கு அன்னை ‘அதிசய பனிமாதா” என்று அனைவராலும் அன்புடனும், ஆர்ப்பரிப்புடன் அழைக்கப்படுகிறாள். இத்தகைய பெருமைமிகு அன்னையின் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்டு 5ல் நிறைவடையும். குறிப்பாக ஆகஸ்டு மாதம் 4ம் தேதி நடைபெறும் சிறப்புமிக்க தேர்பவனியில் கலந்து கொண்டு அருள்வரங்களையும் பொருள் வரங்களையும் பெற்றோர் ஏராளம் ஏராளம். நீங்களும் இத்திருநாட்களில் கலந்து கொண்டு அன்னையின் சிறப்பு ஆசீரைப் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கின்றோம்.

